ட்ரெண்டிங்

கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை பணியிட மாற்றம்!

புகாருக்குள்ளான சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியைப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

சேலம் மாநகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் பழமையானதாகவும், புகழ்பெற்றதாகவும் விளங்குகிறது கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளி சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வள்ளுவர் சிலைக்கு அருகே அமைந்துள்ளது. அம்மாப்பேட்டை, வாழப்பாடி, அயோத்தியாபட்டினம், ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, கொண்டலாம்பட்டி, ஐந்து ரோடு, நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம், சாரதா கல்லூரி சாலை, அஸ்தம்பட்டி என சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500- க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர்.

 

மாநகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில்,மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுகாதார பணியாளர்கள் இல்லாததும், இதனால் பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆவதால், கழிவறைகளைப் பயன்படுத்த முடியாத சூழலில் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து ஆசிரியர்கள், தலைமையாசிரியையிடம் கூறினால், மாற்று சான்றிதழ் வழங்கி வீட்டுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டுவதாகக் குற்றச்சாட்டியுள்ள மாணவிகள், நேற்று (அக்.06) காலை 10.00 மணிக்கு வகுப்புகளைப் புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இது குறித்து தகவலறிந்து வந்த சேலம் டவுன் மகளிர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளியின் தலைமையாசிரியை மாணவிகள் மத்தியில் பகிரங்க மன்னிப்புக் கோரினார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, மாணவிகள் வகுப்புக்கு திரும்பினர்.

 

இந்த நிலையில், கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை தமிழ்வாணியை, இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.