ட்ரெண்டிங்

சிண்டிகேட் தேர்தல் நடத்த எதிர்ப்பு....தர்ணா.....!

சிண்டிகேட் தேர்தல் நடத்த எதிர்ப்புத் தெரிவித்து செனட் பேரவைக் கூட்டத்தில் இருந்து அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் வெளிநடப்புச் செய்தனர். 

சேலம் மாவட்டம், கருப்பூரில் அமைந்துள்ளது பெரியார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் மீது தொடர்ந்து ஊழல், முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில், இன்று (பிப்.13) காலை 11.00 மணிக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கத்தில் ஆட்சிமன்றக் கூட்டம் எனப்படும் செனட் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அத்துடன், சிண்டிகேட் உறுப்பினரைத் தேர்வுச் செய்வதற்கான தேர்தலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தலைத் தனியாக நடத்த வலியுறுத்தியும் செனட் பேரவைக் கூட்டத்தில் இருந்து அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் வெளிநடப்புச் செய்தனர். அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் கூட்ட அரங்கம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சிமன்ற கூட்ட உறுப்பினர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கூட்டத்தை துணைவேந்தர் ஒத்திவைத்தார்.