ட்ரெண்டிங்

பண மோசடி செய்த வழக்கில் தம்பதிக்கு 3 ஆண்டுகள் சிறை!

 

கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்த தம்பதிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. 

சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் கோபிநாதன் (வயது 28) என்பவருக்கு கூட்டுறவுத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார், கலையரசு தம்பதி, நடேசனிடம் ரூபாய் 8.5 லட்சத்தைப் பெற்று கொண்டது. 

எனினும், நீண்ட காலம் ஆகியும் வேலை வாங்கித் தராததால், பணத்தைத் திருப்பித் தருமாறு நடேசன் கேட்க, அந்த தம்பதி தரவில்லை. இதையடுத்து, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் கோபிநாதன் புகார் மனு அளித்தார். அதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட தம்பதியின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்திற்குள் ஆறாவது சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கமலக்கண்ணன் தீர்ப்பு வழங்கினார்.

அதில், ஐய்யனார் மற்றும் கலையரசி தம்பதிக்கு சுமார் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், ரூபாய் 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த தம்பதியை காவல்துறையினர், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.