ட்ரெண்டிங்

 சேலம் மாவட்டத்தில் 91.75% தேர்ச்சி! 


தமிழகத்தில் 2023- 24 ஆம் கல்வியாண்டுக்கான 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் 10- ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 10) காலை 09.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதியைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத்தில் மொத்தம் 20,691 மாணவர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர். அறிவியலில் 5,104,  சமூக அறிவியலில் 4,428, ஆங்கிலம் 415, தமிழில் 8 மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற்றனர்.

10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் மொத்தம் 4,105 பள்ளிகள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளன; 87.90% அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சிப் பெற்ற நிலையில், 91.77% அரசு உதவிபெறும் பள்ளிகள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள 296 அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதிய 89.64% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதிய 24,683  மாணவ, மாணவிகளில் 22,126 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்

சேலம் மாவட்டத்தில் மாணவர்கள் 21,474, மாணவிகள் 20,877 என 42,351 பேர் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில், 38,859 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 19,066, மாணவிகள் 19,793 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மாணவர்கள் 88.79% பேரும், மாணவிகள் 94.75% பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.