ட்ரெண்டிங்

அரசு மருத்துவமனை சிகிச்சைப் பிரிவில் சடலம்.... நோயாளிகள் அவதி!

சேலம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்றவரின் சடலம் இரண்டு நாட்களாக சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்ட அவலநிலை நிகழ்ந்துள்ளது.

 

சேலம் மாநகரில் அமைந்துள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 3,000- க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

இந்த நிலையில், மருத்துவமனையில் ஆண் சிகிச்சைப் பிரிவில், மருத்துவமனை ஊழியர்கள் ஒரு சடலத்தைக் கொண்டு வந்து வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சக நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள், சடலத்தை ஏன் சிகிச்சைப் பிரிவில் வைத்துள்ளீர்கள்? இதனால் எங்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்றனர்.

 

இதற்கு ஊழியர்களோ, இறந்தவரின் உடலை ஆவணங்கள் ரெடியான பிறகு எடுத்துவிடுவோம் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

 

இறந்தவரின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், கடும் அவதியடைந்துள்ள சக நோயாளிகள், உடனடியாக அந்த சடலத்தை அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.