ட்ரெண்டிங்

வங்கிகள் உரிய காரணங்களின்றி கல்விக் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது- மாவட்ட ஆட்சியர

சேலம் அரசு சட்டக் கல்லூரிக் கூட்டரங்கில் கல்விக் கடன் தொடர்பாக வங்கியாளர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம். இ.ஆ.ப. தலைமையில் நேற்று (செப்.27) நடைபெற்றது.

 

இந்த கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்ததாவது, கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் உயர் கல்வி கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக எந்த ஒரு மாணவனுக்கும் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே கல்விக் கடன்கள் வழங்கப்படுகிறது.

 

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 153 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று மாவட்டத்தில் 47 வங்கிகள் மற்றும் இதன் 501 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. கல்வி கடன் வழங்குவது குறித்து அனைத்து வங்கிகளின் கிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.

 

மாவட்ட நிர்வாகத்தால் வரும் அக்டோபர் 15- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாபெரும் கல்வி கடன் மேளா நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்களும் கல்வி கடன் பெற விருப்பமுள்ள அனைத்து மாணவர்களையும், அக்டோபர் 15 - ல் நடைபெறவுள்ள மாபெரும் கல்வி கடன் மேளாவில் பங்கேற்க செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

குறிப்பாக இக்கூட்டத்தில் வங்கிகள் கல்விக் கடன் விண்ணப்பங்களின் மீது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கடன் வழங்க வேண்டுமெனவும், உரிய காரணங்கள் இன்றி கல்விக் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது என வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசால் மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள "வித்யா லட்சுமி" இணைய தளத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

 

 

மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு வங்கியாளர்களுக்குக் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கிட மாவட்ட நிர்வாகம் எப்பொழுதும் தயாராக உள்ளது. சேலம் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 15- ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படவுள்ள மாபெரும் கல்வி கடன் மேளாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம், இ.ஆ.ப. தெரிவித்தார்.

 

முன்னதாக, இக்கூட்டத்தில் 2007- ஆம் ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்குவதில் மாபெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்ட போது அங்கு முன்னோடி வங்கி மேலாளராகப் பணியாற்றி, தற்பொழுது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை முதுநிலை கடன் ஆலோசகராக பணிபுரியும் வனங்காமுடி இவ்வொருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கல்விக்கடன் வழங்கிடும் சாத்தியக் கூறுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து வங்கி கிளைகளின் மேலாளர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

 

இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை முதுநிலை கடன் ஆலோசகர் வனங்காமுடி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ராஜ்குமார், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், அரசு சட்டக் கல்லூரி முதல்வர் துர்கா லட்சுமி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி கிளைகளின் மேலாளர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.