ட்ரெண்டிங்

ஆதிதிராவிடர் மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக் கூடம்- மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தகவல்!

சேலம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நேற்று (செப்.20) காலை 11.00 மணிக்கு ஆதிதிராவிட மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர்களுடனான மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப.,ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் வசதி, தெரு விளக்கு, சமுதாய கழிவறை, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், முழுமையாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மயானம் மற்றும் மயானப்பாதை வசதிகள் ஏற்படுத்திட ஏதுவாக தொடர்புடைய ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் மூலம் தள ஆய்வு மேற்கொண்டு நிலத்தைத் தேர்வு செய்து மயானம் மற்றும் மயானப்பாதை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

மேலும், ஆதிதிராவிடர் மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக் கூடம் அமைத்துத் தருவதற்கு ஏதுவாக தள தணிக்கை மேற்கொண்டு நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தீண்டாமை ஒழிக்கும் பொருட்டு சமூக நல்லிணக்கத்துடன் திகழும் சிறந்த கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்கிராமங்களின் வளர்ச்சிக்காக பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருவதும் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

 

இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தமிழரசி, ஆதிதிராவிட நல அலுவலர் சுந்தர் உள்ளிட்டத் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.