ட்ரெண்டிங்

வேகமாகக் குறைந்து வரும் அணையின் நீர்மட்டம்- செய்வதறியாது தவிக்கும் குறுவைச் சாகுபடி செய்து

மேட்டூர் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு ஜூன் 12- ஆம் தேதி முதல் ஜனவரி 28- ஆம் தேதி வரை 220 நாட்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து பாசன தேவைக் குறையும்.

குறுவை சாகுபடிக்கு ஜூன் 12- ஆம் தேதி முதல் செப்.15 - ஆம் தேதி வரை 125 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும். நடப்பு ஆண்டில் 5.25 லட்சம் ஏக்கரில் குறுவை பயிரிடப்பட்டுள்ளது. நேற்று (செப்.20) வரை குறுவை சாகுபடிக்கு 83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. 38 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு 11.96 டி.எம்.சி. மட்டுமே உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,844 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 6.500 அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதிவேகமாக சரிந்து வருகிறது. இதனால் குறுவைச் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சம் காவிரி டெல்டா விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

மீன் வளத்தைப் பாதுகாக்கவும், குடிநீர் தேவைகளுக்காகவும் மேட்டூர் அணையில் 9.6 டி.எம்.சி. தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். கூடுதல் தண்ணீரை எடுக்கும் பட்சத்தில் மீன்வளம் பாதிப்பதோடு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செய்வதறியாது? தவிக்கும் நிலையில்,  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

இன்று (செப்.20) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,844 கனஅடியில் இருந்து 2,938 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.75 அடியில் இருந்து 39.13 அடியாகக் குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 11.64 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.