ட்ரெண்டிங்

சேலத்தில் 182 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்!

சேலம் மாநகரில் உள்ள சாரதா கல்லூரி சாலை, ராமகிருஷ்ணா சாலை, நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

 

சுமார் 30- க்கும் மேற்பட்ட உணவகங்களில் நடந்த சோதனையில் உணவுகளின் தரம், உணவுத் தயாரிக்கும் அறை மற்றும் பிரிட்ஜ் ஆகியவற்றை ஆய்வுச் செய்தனர். அப்போது, சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த சுமார் 182 கிலோ கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

அத்துடன், சம்மந்தப்பட்ட உணவகங்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள், உணவுகளைச் சுத்தமாகவும், சுகாதாரமும் சமைக்க வேண்டும்; மீதியான உணவுகளை அன்றைய தினம் காலி செய்ய வேண்டும்; உணவுத் தயாரிக்கும் அறையை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். கெட்டுப்போன இறைச்சியை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தால், உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

 

இதனிடையே, சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, உணவகங்களில் வைத்திருந்த சுமார் 75 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளைப் பறிமுதல் செய்தனர்.

 

உணவகங்களில் இருந்து கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தது, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.