ட்ரெண்டிங்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி வீட்டில் வைத்து, சிலைக்கு மலர்களால் அலங்காரங்கள் செய்தும், பொங்கல், சுண்டல், இனிப்புகளை வைத்து படையலிட்டும், அதனை அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி மகிழ்ந்தனர்.

 

அதேபோல், தமிழகத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் அதிகாலை முதலே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அத்துடன், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

 

அந்த வகையில், சேலம் மாநகரில் உள்ள கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் இன்று (செப்.18) அதிகாலை கணபதி ஹோமமும், அதைத் தொடர்ந்து, விநாயகருக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது.

 

இதையொட்டி, நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடைவீதியே களைக்கட்டியுள்ளது.