ட்ரெண்டிங்

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றிய மாநகராட்சிப் பணியாளர்கள்!

சேலம் மாநகராட்சி மொத்தம் 60 வார்டுகளைக் கொண்டது. அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய நான்கு மண்டலங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி பகுதிகளில் அனுமதிப் பெறாமல் வைக்கப்படும் பேனர்களால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகிறது. அத்துடன், மக்களுக்கு பெரும் இடையூறாகவும் உள்ளது.

 

இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழைத் தொடங்கவிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப., உத்தரவின் பேரில் மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

 

குறிப்பாக, மாநகரில் சாரதா கல்லூரி சாலை, ஐந்து ரோடு, நான்கு ரோடு உள்ளிட்டப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். அத்துடன், அனுமதியின்றி பேனர்களை வைக்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

சேலம் மாநகராட்சியின் இத்தகைய அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.