ட்ரெண்டிங்

விமான சேவை வழங்க தயாராகி வரும் சேலம் விமான நிலையம்!

சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் அமைந்துள்ளது சேலம் விமான நிலையம். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனின் தொடர் முயற்சியால், இந்த விமான நிலையம் உதான் 5.0 திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சேலம் விமான நிலையத்தில் இருந்து கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவையை வழங்குவதற்கு அலையன்ஸ் ஏர் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்களுக்கு, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதியை அளித்துள்ளது.

 

அத்துடன், வரும் அக்டோபர் 23- ஆம் தேதி சேலம் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என்றும், விமான சேவைகளின் முழு அட்டவணையையும் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.

 

அதன்படி, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், சேலம் - ஹைதராபாத் - சேலம், சேலம்-பெங்களூர்- சேலம் ஆகிய வழித்தடங்களில் வாரத்தில் 4 நாட்களுக்கும், அலையன்ஸ் ஏர் நிறுவனம் சேலம்- பெங்களூர்- சேலம், சேலம்- கொச்சி- சேலம் ஆகிய வழித்தடங்களில் வாரத்தில் 7 நாட்களுக்கும்

விமான சேவையைத் துவங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

 

இந்த நிலையில், சேலம் விமான நிலையத்தில் வண்ணம் பூசும் பணிகள், பயணிகளுக்கு தேவையான விமான நிலையத்தில் அமருமிடம், கழிவறைகள், பயணிகள் அமர்ந்து உணவு உண்ணும் வகையில் உணவுக்கூடம், விமான நிலைய பணியாளர்களுக்கான அறைகள் உள்ளிட்டவைத் தயார்படுத்தும் பணியில் பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை சேலம் விமான நிலைய நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.