ட்ரெண்டிங்

சேலத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர்!

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115- வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.15) காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கி வைத்து, மகளிர்களுக்கு பிரத்யேக ஏ.டி.எம். அட்டைகளை வழங்கினார்.

 

அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இந்த திட்டத்தை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர்.

 

அந்த வகையில், சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் இன்று (செப்.15) மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மகளிர்களுக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கி, சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

 

அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். தகுதி வாய்ந்த நபர்களை இத்திட்டம் முழுமையாகச் சென்றடையும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் பல்வேறு துறைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.