ட்ரெண்டிங்

சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஐ-லவ் குரும்பப்பட்டி சின்னம்!

 

சேலம் மாவட்டம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளைக் கவர ஐ- லவ் குரும்பப்பட்டி பூங்கா என்ற சின்னம் ஆர்டின் லோகோவுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவர் விளையாட்டு பகுதியை விரிவாக்கம் செய்து வருகின்றனர்.

 

ஏற்காடு மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில், புள்ளிமான், கடமான், முதலை, மலைப்பாம்பு, குரங்கு, நரி, வண்ணப்பறவைகள், வெள்ளை மயில் என 200- க்கும் மேற்பட்ட வன உயிரினங்களைப் பராமரித்து வருகின்றனர்.

 

இரண்டாம் நிலை உயிரியல் பூங்காவாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், பல்வேறு மேம்பாட்டு பணிகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது. இதில், பூங்காவை விரிவாக்கம் செய்து கரடி, சிறுத்தை உள்ளிட்ட பெரிய விலங்குகளைக் கொண்டு வந்து மக்கள் பார்வைக்கு விட்டு பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

 

இந்த சூழலில், பூங்காவினுள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். இதில், செயற்கை நீரூற்று இருக்கும் இடத்தின் முன்பு ஐ-லவ் குரும்பப்பட்டி ஜூ என சின்னம் அமைத்து வருகின்றனர். லவ் சிம்பலுடன் குரங்கு, பறவை, யானை ஆகிய உருவங்களும் எழுத்தில் இடம் பெற்றுள்ளது.

 

பார்க்க மிகவும் அழகாக இருக்கும் இருக்கும் இந்த சின்னத்தில் லவ் லோகோ பின்னால் நின்று, சுற்றுலாப் பயணிகள் போட்டோ எடுத்துக் கொள்ளவும் வழிவகைச் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், பூங்காவிற்குள் செல்ல சுற்றுலாப் பயணிகள் பணத்தைச் செலுத்தி டிக்கெட் எடுத்து வந்த நிலையில், தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையையும் வனத்துறைத் தொடங்கியுள்ளது.