ட்ரெண்டிங்

கடைசி வரை பெரியாரை மட்டுமே தலைவராகக் கொண்டு செயல்பட்டார்- பேரறிஞர் அண்ணாவுக்கு ஆராய்ச்சியா

பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் எனும் பட்டயப் படிப்புகள் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு தொடங்கப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

 

பெரியார் பல்கலைக்கழக தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இருக்கை, பேரறிஞர் அண்ணா இருக்கை, முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள்,சமூகநீதி நாள், பல்கலைக்கழக 27-வது ஆண்டு நிறுவன நாள் விழா இன்று (செப்.15) காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.

 

விழாவில் பேசிய கல்வியின் கலங்கரை விளக்கம் என்ற தலைப்பில் சுவீடன் நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர் விஜய் அசோகன், அண்ணாவின் சிந்தனை ஆச்சரியத்திற்குரியது. அண்ணாவை அரசியல்வாதியாக மட்டும் பார்க்கக் கூடாது. அவர் மிகச் சிறந்த சிந்தனைவாதி; கொள்கைவாதி. கடைசி வரை பெரியாரை மட்டுமே தலைவராகக் கொண்டு செயல்பட்டார். எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளை வழங்கும் வகையிலான செயல்பாடுகளை அண்ணா உருவாக்கினார். 1944- ல் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக மாற்றும் அண்ணாத்துரை தீர்மானம் மிக முக்கியம் வாய்ந்தது. மக்களுக்குத் தேவையானவற்றை செய்வதற்கு அதிகாரம் தேவை என அண்ணா நினைத்தார்.

 

இதில் மட்டுமே பெரியாருடன் அவர் முரண்பட்டார். யேல் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் பற்றி வகுப்பெடுத்த பெருமைக்குரியவர் அண்ணா. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி உறவுப் பாலத்தை கட்டமைத்தவர் அண்ணா என்று இந்திரா காந்தி பாராட்டியுள்ளார். எளிய மனிதர்களின் பின்னால் நின்று, அவர்களை மேடையேற்றிய பெருமைக்குரியவராக அண்ணா திகழ்ந்தார். அண்ணாவின் வருகைக்கு முன்பு மேடையில் பெரியவர்கள் மட்டுமே இருந்தனர். அண்ணாவின் மேடையில் எளியவர்கள் இருந்தனர். கடைமட்டத்தொண்டன் வரை நீண்டப் பட்டியலை வாசிக்கும் பழக்கம் அவருடைய கட்சித் தொண்டர்களின் பாசத்தைப் பெற்றிருந்தது" எனத் தெரிவித்தார்.

 

அரிதினும் அரிது கேள் என்ற தலைப்பில் பேசிய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இராசேந்திரன், இரண்டரை ஆண்டு மட்டுமே பள்ளிக்கு சென்றவரின் பெயரில் பல்கலைக்கழகம் இயங்குவது அவரின் மதிப்பை தெளிவாக்குகிறது. பெரியாரின் போக்கை பிடிக்காமல் அவரது தந்தை சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதி வைத்து விட்டார். தந்தையால் புறக்கணிக்கப்பட்ட பெரியாரை, தந்தை என்று சமூக அழைக்கும் அளவுக்கு அவர் இருந்தார்.

 

ஆசிரியர்கள் மாணவர்களை வளர்க்கிறார்கள். மாணவர்கள் ஆசிரியர்களை வளர்க்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படை கேள்வி கேட்பதுதான். கேள்வியின் அடிப்படையில்தான் இன்றைக்கு நிலவில் தரையிறங்கும் அளவிற்கு ஆராய்ச்சிகள் அதிகரித்துள்ளன. அரிதினும் அரிது கேட்கும்போதுதான் கிடைக்கும். கேள்வி கேட்பவர்களால்தான் இந்த உலகம் இயங்கி வருகிறது. நான் யார் என்பது பெயரில் இல்லை. யாராக இருக்கிறீர்கள் என்பதில் இருக்கிறது. மனிதனாக இருக்கிறேனா என்பதில் இருந்துதான் பதில்கள் பிறக்கிறது. டிஜிட்டல் உலகில் செயற்கை விஷயங்கள் அதிகரித்து வருகின்றன.

 

இயந்திரங்களுடன் இணைந்து வேலை செய்த காலம், இயந்திரம் தனித்து இயங்கிய காலம், நம்முடைய வேலையை எந்திரங்கள் செய்ய கற்றுக் கொடுத்த காலம் போய், மனிதர்களுக்கு எந்திரங்கள் கற்றுக் கொடுக்கும் காலம் வந்து விட்டது. என்னைப் போன்று எந்திரம் செய்யும் நிலையில், நான் யார் என்ற கேள்வி அவசியமானதாக மாறிவிடுகிறது.

 

இணையவாசிகளாக அதிகம் இருக்கும் இளைஞர்கள் உரிய வழிகாட்டுதலை பெரியாரிடம் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கேட்டதுக்கு அதிகமான தகவல் கிடைக்கும் காலத்தில், அரிதானவற்றை கேட்க இளைஞர்கள் தயாராக வேண்டும். எதைக் கேட்டாலும் அறிவியல் பூர்வமாக இருந்தால் மட்டுமே நம்ப வேண்டும் என்ற பெரியாரின் வழியில் இளைஞர்கள் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.