ட்ரெண்டிங்

நேர்மறை செய்திகளை பொதுமக்களிடம் அதிகம் சேர்க்க வேண்டும்- துணைவேந்தர் ஜெகநாதன் பேச்சு!

நேர்மறைச் செய்திகளை பொதுமக்களிடம் அதிகம் சேர்க்கும் பணியை பத்திரிக்கையாளர்கள் மேற்கொள்ள வேண்டும். என்று பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
 
 ஜி20 மாநாட்டினையொட்டி, சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை, அகில இந்திய வானொலியின் சென்னை மண்டல செய்திப்பிரிவு இணைந்து டிஜிட்டல் உலகில் இதழியில் கல்வி என்ற தலைப்பிலான கருத்தரங்கினை நடத்தின.

இந்த கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து பேசிய பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன்,
தேர்வு முடிவுகளைத் தெரிந்துக் கொண்ட பின்னரும் கூட மதிப்பெண்களை அறிந்துக் கொள்ள நாள் கணக்கில் காத்திருந்த காலங்கள் உண்டு. ஆனால், தற்போது நொடிப் பொழுதில் செய்திகள் உலகின் எல்லா மூலைகளில் இருந்தும் கிடைக்கின்றன. ஓரிடத்தில் நடக்கும் நிகழ்வை உலகம் முழுக்க ஒரே நேரத்தில் காணும் அளவிற்கு ஊடகம் வளர்ந்து நிற்கிறது. நொடிப் பொழுதில் செய்திகள் ஒவ்வொருவரையும் போய் சேர்ந்து விடுகிறது.

முன்பு ஒரு தகவலை செய்தியாக கேட்கும்போது, அதை முழுமையாகத் தெரிந்து கொள்ள பொதுமக்களுக்கு நேரமிருந்தது. தற்போதைய காலகட்டத்தில் சில நேரங்களில் தவறான செய்திகள் வெறும் பரபரப்புக்காக சிலரால் பரப்பப்பட்டு விடுகின்றன. அவை தவறான தகவல் என்பதை அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்க முடிவதில்லை. சரியான  தகவலைக் கூட தனிப்பட்ட நோக்கத்திற்காக பரபரப்பாய் மாற்றியமைத்து விடுகிறார்கள். பரபரப்பு செய்திகள் தனிநபரின் விருப்பத்திற்கானதாக அமையக்கூடாது. நேர்மறை செய்திகள் மற்றும் தகவல்களால் பொதுமக்களிடையே நம்பிக்கையை பத்திரிக்கையாளர்கள் உருவாக்க வேண்டும். இதழியல் அறத்தை மீறக்கூடாது என்பதை இளைஞர்களுக்கு மூத்தவர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றார்.

இந்த கருத்தரங்கில், பெரியார் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ஜெயராமன், நூலக அறிவியல் துறைப் பேராசிரியர் என்.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் அருள்செல்வன் செந்தில்வேல், அண்ணா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் எஸ்.அருள்செல்வன் ஆகியோர் டிஜிட்டல் உலகில் ஊடகத்தின் பங்களிப்பு குறித்து பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.