ட்ரெண்டிங்

சேலம் ரயில்வே கோட்டத்தில் ரூபாய் 270 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்!


சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா இன்று (பிப்.24) காலை 11.00 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடந்து வரும் பல்வேறு திட்டப் பணிகளை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா, சேலம் ரயில்வே கோட்டத்தில் சுமார் ரூபாய் 270 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்புறம் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் 2,000- க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லையும் நாட்டி வைக்கவுள்ளார்.

அதேபோல், சேலம் ரயில்வே கோட்டத்திலும் பல்வேறு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன், முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கவுள்ளார். சேலம் ரயில்வே கோட்டத்தில் 21 சப்வே தொடங்கி வைக்கப்பட உள்ளது; இது தவிர 11 பாலங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. 

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர், மொரப்பூர், ஈரோடு, வடகோவை, மேட்டுப்பாளையம், நாமக்கல், சின்ன சேலம் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகளும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி சேலம் ரயில்வே கோட்டத்தில் 40 இடங்களில் நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளது என்றார். 

இந்த நிகழ்வில், ரயில்வே மேலாளர் சிங்கா, கூடுதல் மேலாளர் சிவலிங்கம், முதன்மை திட்ட மேலாளர் அனில் குமார், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.