ட்ரெண்டிங்

சேலத்திற்கு மெட்ரோவா? நியோவா?- விரிவான தகவல்!

சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவையைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலத்தில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, இதற்கான ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். 

 

இந்த நிலையில், சேலத்தில் இரு வழித்தடங்களில் 35.19 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ நியோ போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

 

மெட்ரோ நியோ என்பது உயர்நிலை மின்சார இழுவை மற்றும் ரப்பர் டயர்கள் கொண்டப் பேருந்து அமைப்பு ஆகும். இது வழக்கமான மெட்ரோ ரயிலை விட சிறியதாகவும், இலகுவாகவும் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதற்கான பராமரிப்புச் செலவு குறைவு என்ற போதிலும், மெட்ரோ ரயிலைக் காட்டிலும் வேகம் குறைவாக இருக்கும் என்றும், பயணம் செய்யும் நேரம் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். 

 

அதேபோல், சாத்தியக் கூறுகள் மட்டுமே அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே இந்த திட்டம் சேலத்தில் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.