ட்ரெண்டிங்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் தீக்குளிக்க முயற்சி!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.11) காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பொதுமக்கள் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளையும், உதவிகளையும் கோரி மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். 

அந்த வகையில், சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தில் உள்ள கல்லுக்காட்டுவளவு சூரப்பள்ளிக் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் மற்றும் அவரது சகோதரர்களான ராஜி, அம்மாசி உள்ளிட்டக் குடும்பங்களைச் சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 20- க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். 

அப்போது, ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு நின்றுக் கொண்டிருந்தவர்கள், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றித் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தீக்குளிக்கவும் முயன்றனர். அங்கிருந்த காவல்துறையினர், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். 

அதைத் தொடர்ந்து, சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் எதற்காக தீக்குளிக்க முயன்றுள்ளீர்கள் என்று காவல்துறையினர் கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர்கள் கூறியதாவது, "தங்களது குடும்ப சொத்தான 54 சென்ட் நிலத்தை சகோதரர்கள் சரிசமமாகப் பாகப்பிரிவினை செய்து கொண்டோம். ஆனால், தங்களது குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் 7 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். 

இது குறித்து ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்; புகார் மனு மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை; எனவே, தங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும்" என்று கோரினர். 

இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த காவல்துறையினர், அவர்களை அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.