ட்ரெண்டிங்

அம்மாபேட்டையில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று கொண்ட எம்.பி.!

தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், தனது நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்று வார்டு வாரியாக மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று கொண்டு வருகிறார். 

அந்த வகையில், இன்று (செப்.04) காலை 10.00 மணிக்கு சேலம் மாநகரில் உள்ள சேலம் தெற்கு மற்றும் சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஆய்வு செய்த எஸ்.ஆர்.பார்த்திபன், தொகுதி வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

அதைத் தொடர்ந்து, அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 9, 10, 11 ஆகிய வார்டுகளில் நடைபெற்ற குறைத் தீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், "சேலம் மாநகராட்சியின் அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 14 வார்டுகளிலும் நேரடியாக சென்று மக்களைச் சந்தித்து, மனுக்களைப் பெற்று, தீர்வுக் காண நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த மனுக்கள் பெரும் முகாமில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாநகராட்சியின் அதிகாரிகள், வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட கலந்து கொண்டனர். 

கடந்த நான்கு ஆண்டுகளில் தனது சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 1,10,000 மனுக்களைப் பெற்று தீர்வுக் காணப்பட்டுள்ளது; சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை நேரடியாக சந்தித்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.