ஆன்மிகம்

கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

 

சேலம் அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

வரும் அக்டோபர் 27- ஆம் தேதி அன்று சேலம் மாநகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் மஹா குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல், கொடிமரம் பிரதிஷ்ட்டைச் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது . அதைத் தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு யாகங்கள், ஹோமங்கள் நடைபெறவுள்ளது.

 

இந்த நிலையில், சேலம் அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் மஹா குடமுழுக்கு தொடர்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (அக்.21) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சேலம் அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கடைகள் மூடப்படும்" என்று வாதிட்டார்.

 

இதையடுத்து, சேலம் அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.