ட்ரெண்டிங்

சேலம் மாநகரில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை!

கடந்த சில நாட்களாக சேலம் மாநகரில் வெயில் வாட்டிவதைத்து வந்தது. குறிப்பாக, சொல்லவேண்டுமென்றால் கோடைக்கால வெயில் போன்று காணப்பட்டது. இந்த நிலையில், வளிமண்டல கீழடு சுழற்சிக் காரணமாக, இரண்டாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 31) மாலை 04.00 மணியளவில் அம்மாப்பேட்டை, பொன்னம்மாபேட்டை, பட்டைக்கோவில், பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், கோரிமேடு, நான்கு ரோடு, மத்திய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, ஜங்சன், சூரமங்கலம் உள்ளிட்ட சேலம் மாநகர பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. 

இதனால் சாலைகளில் மழைநீருடன் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சேலம் நான்கு ரோடு முதல் மத்திய பேருந்து நிலையம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவோர் என அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். 

அதேபோல், அம்மாப்பேட்டை பிரதான சாலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெறுவதால், சாலை சேறும், சகதியுமாக இருப்பதால், வாகனவோட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். அதேபோல், அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் உள்ள தெருக்களிலும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து சேலம் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலைகளைச் சீரமைக்க வேண்டும், சாக்கடைகளை முறையாகத் தூர்வார வேண்டும், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.