ட்ரெண்டிங்

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு எழுதிய பெண் தற்கொலை முயற்சி!

சேலம் மாவட்டம், மாசிநாயக்கன்ப்பட்டியைச் சேர்ந்த தம்பதி சரவணன்- நவநீதா. இந்த தம்பதி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துக் கொண்டது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவர் பள்ளியில் படித்து வருகிறார். சரவணன் பெட்ரோல் நிலையம் ஒன்றில் பணிப்புரிந்து வருகிறார். நவநீதா காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். 

இந்த நிலையில், ஆகஸ்ட் 29- ஆம் தேதி மகன் பள்ளிக்கும், சரவணன் பணிக்கும் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் நவநீதா தனியாக இருந்துள்ளார். இந்த நேரத்தில், நவநீதாவை அவரது தங்கை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேச முயற்சி செய்துள்ளார். எனினும் தொலைபேசியை நவநீதா எடுக்காத நிலையில், சரவணனுக்கு தொடர்புக் கொண்டு இது குறித்து தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, சரவணன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள தனது நண்பரை தொலைபேசியில் அழைத்து தனது வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, சரவணனின் வீட்டிற்கு சென்ற அவர், கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற அவர், நவநீதா தூக்கில் தொங்கியதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்ததுடன், சரவணனுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து, நவநீதாவை மீட்டு அக்கம்பக்கத்தினர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்மாப்பேட்டை காவல்துறையினர், வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆகஸ்ட் 26- ஆம் தேதி நடந்த காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வை நவநீதா சரியாக எழுதவில்லை என்பதும், விரக்தி அடைந்த அவர் தூக்கிட்டுத் தற்கொலை கொள்ள முயன்றதும் தெரிய வந்துள்ளது.