ட்ரெண்டிங்

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்- மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சுயத்தொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் நலிவுற்ற பெண்களுக்கு சுயத்தொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. 

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தினை கணினி மயமாக்கும் பொருட்டு TneGA மூலம் வலை பயன்பாடு தயார் செய்யப்பட்டு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு அரசு இ- சேவை மையங்களில் இணைப்பு (link) வழங்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் நலிவுற்ற பெண்கள் இ- சேவை மையத்தில் வருமான சான்று நகல் (ஆண்டு வருமானம் ரூபாய் 72,000- க்குள் இருக்க வேண்டும்), தையல் பயிற்சி சான்று நகல் (6 மாதம் அல்லது அதற்கு மேல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும், பள்ளி மாற்றுச்சான்று அல்லது வயதுச் சான்று (வயது 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்), ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சாதிச் சான்று நகல், விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் அல்லது ஊனமுற்றோர் எனில் அதற்குரிய சான்று ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.