வணிக வரித்துறை வருவாயை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்!
தமிழகத்தில் வணிக வரித்துறையின் வருவாயை அதிகரித்து, அதன் மூலம் மக்கள் நலத்திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் முதல்முறையாக நடைபெற்ற மண்டல அளவிலான வணிக வரித்துறை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வணிக வரித்துறையின் வருவாயை அதிகரிப்பது, வரி வசூலை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வணிக வருவாயை அதிகரிப்பது தொடர்பாக அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும், அவற்றை முதலமைச்சருடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சேலம் கோட்டத்தில் வணிக வரி தொடர்பாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றை விரைந்து முடித்து நிலுவை வரிகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
பத்திரப்பதிவுத்துறையில் ஆன்லைன் வாயிலாக ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்யும்போது, அந்த ஆவணத்தைத் தயாரித்த எழுத்தரின் பெயரும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். வழிகாட்டு மதிப்பீட்டைத் தேவையான இடங்களில் குறைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அரசு உரிய முடிவெடுக்கும் என்றும் கூறினார்.
பத்திரப்பதிவுக்கு பொதுமக்கள் இடைத்தரகர்களை நாட வேண்டிய அவசியமில்லை என்றும், நேரடியாக அதிகாரிகளை அணுகி ஆவணங்களைப் பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தினார். அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் ஆவணங்கள் பதிவு செய்யப்படும் எனக் குறிப்பிட்ட அவர், பணம் கொடுத்தால் விரைவாகப் பதிவு செய்து தருவதாகக் கூறும் இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என எச்சரித்தார்.
இறுதியாக, வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



