துணை மேயர் புகார் முதல் அதிமுக வெளிநடப்பு வரை – பரபரப்பாக நடந்த சேலம் மாநகராட்சி கூட்டம்!
சேலம்: சேலம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் துணை மேயர் சாரதா தேவி அளித்த புகார், புதிய பேருந்து நிலையக் கடைகளின் வாடகை விவகாரம், காலாவதியான குடிநீர் பாட்டில்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்ட நிலையில், ஐந்து மாவட்ட குப்பைகளைச் சேலையில் எரிக்கும் திட்டத்தைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சேலம் மாநகராட்சி இயல்பு மற்றும் அவசரக் கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்ய நீலம், துணை மேயர் சாரதா தேவி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் சாரதா தேவியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக கவுன்சிலர்கள் சிலர் மேயரிடம் மனு அளித்தனர். இதற்கிடையே, முந்தைய கூட்டத்தில் தனக்கு இருக்கை வழங்கப்படவில்லை என்றும், சிலர் மிரட்டியதாகவும் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி துணை மேயர் ஆணையாளரிடம் புகார் அளித்தார்.
கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் சாந்தமூர்த்தி, புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக் கடைகளை வாடகைக்கு எடுத்த சிலர் உள்வாடகைக்கு விடுவதாகவும், இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், இறந்தவர்களின் பெயர்களிலும் கடைகள் இருப்பதாகக் குறிப்பிட்டு, வாடகை நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதிமுக கவுன்சிலர் சசிகலா, தனது வார்டில் கழிவறைகளின் பூட்டுகள் அதிகாரிகளால் உடைக்கப்பட்டதாகவும், இதுகுறித்து விளக்கம் கேட்டபோது உரிய முறையில் பதிலளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி விளக்கம் அளித்தார்.
திமுக கவுன்சிலர் தெய்வலிங்கம், கூட்டத்தில் காலாவதியான குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டதாகக் கூறி கண்டனம் தெரிவித்ததுடன், இனிவரும் கூட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, ஐந்து மாவட்டங்களின் குப்பைகளைச் சேலையில் கொண்டு வந்து எரிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், செட்டிச்சாவடி சூரிய மின் திட்டம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படும் சூரிய மின் உற்பத்தித் திட்டம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார். தனியார் குடிநீர்த் திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, யாதவமூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குப்பை எரிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டம் இறுதியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு முடிவடைந்தது.



-SXgDfGgJfO.jpg)