சேலம் சிறையில் லைசால் ரசாயனம் ஊற்றப்பட்ட முதியவர் உயிரிழப்பு; ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம்!
சேலம்: சேலம் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த 71 வயது முதியவர் மீது, தண்டனைக் கைதி ஒருவர் தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் லைசால் ரசாயனத்தை ஊற்றியதாகக் கூறப்படும் சம்பவத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்குக் காரணமான கைதி மீது நடவடிக்கை எடுக்கவும், குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் உறவினர்களுடன் இணைந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த சின்ராஜ் (71), ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக் கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே சிறையில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற திருப்பதி என்பவரும் அடைக்கப்பட்டிருந்தார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சின்ராஜ், சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அங்கு வந்த திருப்பதி, முதியவரிடம் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி, தரையைச் சுத்தம் செய்ய வைத்திருந்த லைசால் ரசாயனத்தை அவர் மீது ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் உடலில் அரிப்பு ஏற்பட்டதாக முதியவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, சிறை அதிகாரிகள் அவரைச் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் சிறைக்குத் திரும்பிய சின்ராஜ், பின்னர் நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற முற்றுகைப் போராட்டத்தில், சின்ராஜின் உயிரிழப்புக்குக் காரணமானதாகக் கூறப்படும் கைதி திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும், உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
முதியவரின் உயிரிழப்பைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தால், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.



-hcTFAGMRGb.jpg)