அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கக் கோரி சேலத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தர்ணா!
சேலம்: அரசு நிர்ணயித்த தினசரி ஊதியத்தை வழங்கக் கோரியும், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சியில் ஆர்.எஸ்.கே. என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவாக இருப்பதாகவும், சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதித் தொகை முறையாகக் கணக்கிடப்படுவதில்லை என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பள உயர்வு கோரி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தத் தர்ணா போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
அரசு தங்களுக்கான தினசரி ஊதியமாக ரூ.762 நிர்ணயித்துள்ளதாகவும், ஆனால் தற்போது ரூ.520 சம்பளத்தில் பிடித்தங்கள் போக ரூ.445 மட்டுமே வழங்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். அரசு நிர்ணயித்த ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், மற்ற துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டால் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துவதாகவும், தங்களை ஏளனமாகப் பார்ப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.
அரசு நிர்ணயித்த ஊதியம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



