சாயப்பட்டறை கழிவுகளால் மக்கள் பாதிக்கக் கூடாது: முதலமைச்சர் உத்தரவு – அமைச்சர் வி.கே.ராஜூவ்
சேலம் ஏருமாபாளையம் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ள ஆர்.கே. டையிங் சாயப்பட்டறை தொழிற்சாலையை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி.கே.ராஜூவ், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் நேற்று இரவு நேரில் ஆய்வு செய்தனர்.
சாயப்பட்டறையை மீண்டும் திறக்க அனுமதி கோரி நிர்வாகம் மனு அளித்திருந்த நிலையில், தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வி.கே.ராஜூவ்,
தமிழக வெற்றி கழகம் அரசு பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் சாயப்பட்டறைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
சாயப்பட்டறைகள் முறையாக தண்ணீரை பயன்படுத்தி, கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுகிறார்களா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. விதிமுறைகளின்படி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டால் நிலத்தடி நீருக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் 91 சாயப்பட்டறைகள் உரிய அனுமதி பெற்று செயல்படுவதாகவும், அனுமதி பெறும்போது அளிக்கப்பட்ட திட்டத்தின்படி கழிவுநீர் சுத்திகரிப்பு நடைபெறுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் சாயப்பட்டறை கழிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அமைச்சர், தற்போதைய நிலையில் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும், எந்தவித தவறும் நடைபெறக் கூடாது என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, சேலம் அருகே 5 மாவட்டங்களின் குப்பைகளை கொண்டு எரிசக்தி தயாரிக்கும் திட்டம் குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து விசாரித்து தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.
இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.



