ட்ரெண்டிங்

ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதிக்கலாம்.... கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது!

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மகன் தேவராஜன். இவர் சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் ஒரு புகார் கொடுத்துள்ளார். 

அந்த புகார் மனுவில், "சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகாவிற்குபட்ட உலிபுரம் பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் (வயது 47), தாதகாப்பட்டி அருகே உள்ள திருச்சி பிரதான சாலையில் ஜெராக்ஸ் கடையை நடத்தி வந்தார். இவர் என்னிடம் ஷேர் மார்க்கெட்டில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்.

இதனை நம்பி அவரிடம் பல தவணைகளில் மொத்தமாக ரூபாய் 65.78 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளேன். பணத்தைத் திரும்ப அவரிடம் கேட்டபோது, அவர் சரியான பதில் அளிக்கவில்லை. எனவே, நான் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையடுத்து, வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், சாந்தக்குமாரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் 15 பேரிடம் ஷேர் மார்க்கெட் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைக் கூறி சுமார் 5.26 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு மோசடி செய்தது தெரிய வந்தது. 

அதைத் தொடர்ந்து, சாந்தக்குமாரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.