ட்ரெண்டிங்

குடிநீர் திட்டத்தை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு: 24-ம் தேதி சென்னைக்கு செல்லும் 60 கவுன்சிலர்கள

 

குடிநீர் திட்டத்தை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு: 24-ம் தேதி சென்னைக்கு செல்லும் சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள்

சேலம், ஆக.18: 

சேலம் மாநகராட்சியின் குடிநீர் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

சேலம் மாநகராட்சியில் குடிநீர் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 24-ம் தேதி சென்னைக்கு சென்று நகராட்சி நிர்வாக இயக்குனரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

குடிநீர் திட்டம் தனியாருக்கு வழங்கப்பட்டால் குடிநீர் கட்டணம் அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, குடிநீருக்காக மாதம் ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் முதலமைச்சரை சந்தித்து பொதுமக்களின் கருத்துகளை எடுத்துரைக்க உள்ளோம். இந்த சந்திப்பில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த 60 மாநகராட்சி கவுன்சிலர்களும் இணைந்து சென்று மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்பு அவசரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரச்சினை அதிகரித்துள்ளதால் அந்த தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிறோம். குடிநீர் திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது என பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிப்பதுடன், பொதுமக்களின் கருத்துகளையும் அவர்களிடம் எடுத்துரைக்க உள்ளோம்.

இவ்வாறு மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.