ட்ரெண்டிங்

மேகதாது அணை முயற்சியை தடுக்க வேண்டும் – சேலத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்; தங்கமணி கண்டனம் !

 

சேலத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: விவசாய கடன் தள்ளுபடி, மேகதாது அணை விவகாரம் குறித்து தங்கமணி கண்டனம்

சேலம், ஆக.14:

விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்கக் கோரியும் சேலம் கோட்டை பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசைக் கண்டித்து அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய தங்கமணி, தேர்தல் நேரத்தில் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார். மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடன் பெறவும், பழைய கடனை திருப்பிச் செலுத்தவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் என்றும், ஜூலை மாதத்திற்கான தண்ணீர் பங்கும் முழுமையாக கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

 

“மேகதாது அணையை தடுக்க வேண்டும்”

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சி தமிழகத்தின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என தங்கமணி எச்சரித்தார். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட காவிரி நீரை நம்பியுள்ள பகுதிகள் வறட்சியை சந்திக்கும் அபாயம் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உச்சநீதிமன்றத்தை நாடி தமிழகத்திற்குரிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்காக பயிர்க்கடன் தள்ளுபடி, பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், ஏரி நீர் திட்டம், தலைவாசல் கால்நடை பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதாகவும், முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அறிவித்து வருவதாகவும் விமர்சித்தார்.

“மக்கள் தற்போது விழித்துக் கொண்டுள்ளனர். வரும் காலத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். இந்த ஆட்சி விரைவில் வீட்டுக்குச் செல்லும்” என்று தங்கமணி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.