சேலம்,ஜூலை 17:
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விரைவில் மத்திய புலனாய்வு அமைப்பான (சிபிஐ) விசாரணைக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாக குற்றம்சாட்டினார். காவல்துறையிடம் பல முக்கிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்த போதிலும், அவை முழுமையாக விசாரிக்கப்படவில்லை என்றார்.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பின்னால் முக்கிய நபர்கள் இருப்பதாக ஆரம்பம் முதலே தெரிவித்ததாகவும், அந்த கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை அணுகியதாகவும், அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால், வழக்கு விரைவில் சிபிஐ வசம் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவர்கள் குற்றவாளிகள் என்று கூறவில்லை; உண்மை வெளிவர முழுமையான விசாரணை அவசியம் என்றார்.
சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ப.பா.மோகன் தெரிவித்தார்



