சேலம், ஜூலை 9:
சேலம் மாவட்டத்தில் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் பெரியண்ணன், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி முதல்வர் விஜய் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
பால் உற்பத்தியாளர்கள் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.42 முதல் ரூ.45 வரை கொள்முதல் விலை வழங்கும் நிலையில், ஆவின் நிறுவனம் ரூ.30 முதல் ரூ.32 வரை மட்டுமே வழங்குவதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில், கால்நடைகளுக்கான அடர் தீவனம் மற்றும் உலர் தீவனங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பால் உற்பத்திச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக பால் உற்பத்தி குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய கொள்முதல் விலையில் பால் உற்பத்தியை தொடர்வது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அரசு உடனடியாக கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால், பல விவசாயிகள் கால்நடை வளர்ப்பை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் எச்சரித்தார்.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை பாதுகாக்க அரசு உடனடியாக தலையிட்டு, பயிர்க்கடன் தள்ளுபடி, பால் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பெரியண்ணன் வலியுறுத்தினார்.



