ட்ரெண்டிங்

சேலம் அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி !

 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் குடிநீர் மற்றும் கழிவறை தண்ணீர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 8-ம் தேதி இரவு, மருத்துவமனையின் பிரசவ வார்டில் குடிநீர் மற்றும் கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை என்றும், தனியார் ஒப்பந்த ஊழியர்கள் (கிறிஸ்டல்) பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிவைஎப்ஐ) சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அப்போது, மருத்துவமனையில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகளை கண்டித்து டிஷ்யூ பேப்பர்களை ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி இரண்டு நாட்கள் ஆகியும் அரசு மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனை முதல்வர் மற்றும் பொறுப்பு அமைச்சர் உள்ளிட்டோர் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என டிவைஎப்ஐ நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.

மேலும், நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவமனையில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை உடனடியாக சீரமைக்க தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.