சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோவிலின் வைகாசி விசாக திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன.
விழாவின் உச்ச நிகழ்வாக இன்று நடைபெற்ற தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை தாயாருக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து ராஜகணபதி கோவில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த திருத்தேர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அதில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர்.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கவும், மங்கள வாத்தியங்கள் இசைக்கவும் திருத்தேரோட்டம் தொடங்கியது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் “நமச்சிவாய” என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ராஜகணபதி கோவில் பகுதியில் இருந்து புறப்பட்ட தேரானது இரண்டாவது அக்ரஹாரம், சின்ன கடைவீதி, முதல் அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து மீண்டும் ராஜகணபதி கோவில் அருகே வந்தடைந்தது.
இந்த தேரோட்டத்தை காண சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். திருவிழாவை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கான வசதிகளையும் செய்திருந்தது.


