சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை-யில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு தரம் ஆய்வு – நோயாளிகளிடமும் குறைகள் கேட்டறிந்தார்
அமைச்சர் மருத்துவமனை வளாகத்தின் பல்வேறு பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக நோயாளிகளுக்காக செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்கு சென்று அங்கு வழங்கப்படும் உணவின் தரம், சுகாதார நிலை மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் நேரடியாக உணவு சாப்பிட்டு அதன் தரத்தை பரிசோதித்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை சந்தித்து, மருத்துவ சேவைகள் குறித்து குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார். நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள், மருந்து வசதிகள் மற்றும் மருத்துவர்களின் சேவை குறித்து அமைச்சர் பேசினார்.
பின்னர் அமைச்சர் தனது உடல்நலக் குறைவு காரணமாக அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுக் கொண்டார். குறிப்பாக தோள்பட்டை வலி காரணமாக ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்ட அவர், பின்னர் பிசியோதெரபி சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறியதாவது:
“அனைத்து துறை அமைச்சர்களும் ஓய்வு இல்லாமல் மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். இது மக்களுக்கான ஆட்சி. இதுவரை எப்படி இருந்ததோ தெரியாது, ஆனால் இனிமேல் மக்கள் மையப்படுத்தப்பட்ட நிர்வாகமே நடைபெறும்.
நான் அமைச்சராக இருந்தும் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளேன். பொதுமக்களும் அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கையுடன் சிகிச்சை பெற வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனைகளில் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மருத்துவமனையை அசுத்தப்படுத்தாமல், தங்களது வீட்டைப் போல பராமரிக்க வேண்டும். பொதுச் சொத்துகளை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்.
நல்ல விஷயங்களுக்கு மக்கள் ஒன்றுபட்டு ஆதரவு அளிக்க வேண்டும். தவறுகள் நடைபெறும் இடங்களில் அனைவரும் சேர்ந்து அதை தடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
மேலும், “கடந்த கால ஆட்சியைப் போல் இல்லாமல். மக்கள் தற்போது சுதந்திரமாக உள்ளனர். நேர்மையாக மக்கள் அளித்த வாக்குகளால் தான் தற்போதைய ஆட்சி அமைந்துள்ளது,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



-SXgDfGgJfO.jpg)