ட்ரெண்டிங்

குரூப் 1 தேர்வு- தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு! 


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் இன்று (ஜூலை 13) நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 1 தேர்வுக்கான எழுத்துத்தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் ஒன்றான சேலம் மாவட்டம், சி.எஸ்.ஐ பல்வகை தொழில் நுட்பக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி I தேர்வினை சேலம் மாவட்டத்தில் 13,469 தேர்வர்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இதற்கென சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மேற்கு, சேலம் தெற்கு வட்டங்களுக்குட்பட்ட 37 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 47 தேர்வு கூடங்களில் இன்று இத்தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வினை கண்காணிப்பதற்காக 47 அறை கண்காணிப்பாளர்களும், 47 தலைமை கண்காணிப்பாளர்களும், நடமாடும் கண்காணிப்புக் குழுக்களும், 4 பறக்கும் படைகளும், 12 கண்காணிப்புக் குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தேர்விற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யும் வகையில் குரூப் 1 தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.