ட்ரெண்டிங்

சேலத்தில் கார்த்திகை முதல் நாள் விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் !!!

 

சேலத்தில் உள்ள பிரபலமானான கோவில்களில் ஐயப்ப பக்கதர்கள் கார்த்திகை முதல் நாளான இன்று பக்தி பரவசத்துடன் சுவாமியே சரணம் அய்யப்ப கோஷத்துடன் தங்களது விரதத்தை தொடங்கினர்...

கார்த்திகை மாதம் என்றாலே இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம்.இந்த மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். 

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும்,வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாகவும்,வாகனங்கள் மூலமும் செல்வார்கள்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனம் சிறப்பு பெற்றதாகும்.மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு பக்தர்கள் செல்வது வழக்கம்.

அதன்படி, கார்த்திகை 1-ந் தேதியான இன்று அதிகாலையிலேயே அய்யப்ப பக்தர்கள் வீடுகள், நீர்நிலைகளில் புனித நீராடி விட்டு,அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தொடங்கிய நிலையில், சேலத்தில் உள்ள ராஜகணபதி கோவில்,குரங்குசாவடி ஐய்யப்பன் கோவில்,சித்தர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து,மாலை அணிந்து சுவாமியே சரணம் அய்யப்பா என கோஷமிட்டு ஐயப்ப பக்கதர்கள் தங்களது விரதத்தை இன்று தொடங்கினர். 

மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள் தினமும் காலை,மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள்.ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள். மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களும், மகர விளக்கு பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 60 நாட்களும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.