ட்ரெண்டிங்

சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் – சேலத்தில் இலவச பயிற்சி வகுப்பு !!!

 

மருத்துவ பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் 1,429 சுகாதார ஆய்வாளர் (Health Inspector Grade-II) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக 16.11.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.12-ஆம் வகுப்பில் உயிரியல்/விலங்கியல்/தாவரவியல் ஆகிய பாடங்களைக் கொண்டுள்ள பிரிவில் பயின்றவராக இருத்தல் வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 2 ஆண்டுகள் பல்நோக்கு சுகாதார பணியாளர் அல்லது சுகாதார ஆய்வாளர் படிப்பினை முடித்தவராக இருத்தல் வேண்டும். இப்பணி காலியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆண்கள் மட்டுமே தகுதியுடையவராவார்கள்.

எனவே,சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இப்போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 19.11.2025 அன்று காலை 11.00 மணியளவில் துவங்கப்படவுள்ளது.இப்பயிற்சி வகுப்பானது போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. சுகாதார ஆய்வாளர் பணிக்காலியிடத்திற்கு விண்ணப்பித்து பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 19.11.2025 அன்று காலை 10 மணிக்குள் சேலம் ஏற்காடு பிரதான சாலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர்,டாக்டர்,பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.