ட்ரெண்டிங்

உலகிலேயே மிக உயரமான ஐம்பொன் நaடராஜர் சிலை!


சேலம் மாநகரம், கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஸ்தபதி ராஜா என்பவர் பாலமுருகன் சிற்பக் கலைக்கூடம் என்ற குருகுலம் வைத்து பஞ்ச உலோக சிலைகள் வடிவமைத்து வருகிறார். மூன்று தலைமுறைகளுக்கு மேலாக ஸ்தபதி ராஜாவின் முன்னோர்கள் சிலை வடிவமைப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம், மகாதேவமலை பகுதியைச் சேர்ந்த இந்தோ ஆட்டோ டெக் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த சிவா என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடராஜர் ஐம்பொன் சிலை வடிவமைக்க சேலம் கன்னங்குறிச்சி ஸ்தபதி ராஜாவிடம் கேட்டுள்ளார். இதற்காக சுமார் 9 டன் எடை கொண்ட தங்கம், வெள்ளி, செம்பு, அலுமினியம், துத்தம் ஆகிய ஐம்பொன் உலோகங்களைக் கொடுத்து  2 வருடங்களுக்கு மேலாக 30- க்கும் மேற்பட்ட சிற்பிகள் விரதம் இருந்து பிரம்மாண்டமான நடராஜர் சிலையை வடிவமைத்துள்ளனர். 

மேலும் விநாயகர், பாலமுருகன், காமதேனு, பெருமாள் தாயார், மகாமேரு, காரைக்கால் அம்மையார், பதஞ்சலி முனிவர்கள், வியாகர பாதகர், தீபலஷ்மி, நந்தி ஆகிய சிலைகளுடன் சிவன், பார்வதி இந்திரலோகத்தில் காட்சியளிப்பது போல் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்தபதி ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, வேலூரைச் சேர்ந்த ஆனந்த் சிவா என்பவர் 16 அடி உயரத்தில் பஞ்ச உலோக நடராஜர் சிலை அமைக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். அதற்காக பஞ்ச உலோகத்தால் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடராஜர் பார்வதி அம்மாள் சிலை வடிவமைத்துள்ளோம் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு சிறப்பு பெற்ற இந்த சிலை வருகின்ற புதன்கிழமை அன்று சேலத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு வெள்ளிக்கிழமை வேலூர் மாவட்டம்  குடியாத்தம்-காட்பாடி சாலையில் உள்ள மகாதேவமலையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. 

இந்த பிரம்மாண்டமான நடராஜர் சிலையை வடிவமைக்க இரவு பகல் பாராமல் 30- க்கும் மேற்பட்ட சிற்பிகள் விரதம் இருந்து ஆகம முறைப்படி நடராஜர் சிலை 16 அடி உயரத்திலும், பார்வதி அம்பாள் சிலை 10 1/4 அடி உயரத்திலும் வடிவமைத்துள்ளோம், உலகிலேயே மிக உயரமான 9 டன் எடை கொண்ட 16 அடி உயர இந்த நடராஜர் சிலை, மகாதேவமலையில் சிவன் பார்வதி இந்திரலோகத்தில் காட்சியளிப்பது போல் வைக்கப்பட உள்ளது என்று கூறினார்.