ட்ரெண்டிங்

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை புரிந்தவர்களுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை புரிந்தவர்களுக்கு சுதந்திர தின விழா அன்று வழங்கப்படும் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்,மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தின விழா அன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூபாய் 50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களைப் பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் வரும் ஜூன் 30- க்குள் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை ஜூன் 30- ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அறை எண் 11, மாவட்ட ஆட்சியரக வளாகம், சேலம் 600001 என்ற முகவரியில் வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 0427-2415242 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.