ட்ரெண்டிங்

குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்திட வேண்டும்! 

சேலம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (மே 09) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்திடும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சேலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. 

அந்த வகையில், இன்றைய தினம் நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு மற்றும் குடிநீரின் தேவைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

தற்பொழுது, சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 11 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக மட்டும் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள் மற்றும் 4,466 ஊரக குடியிருப்புகளுக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் சராசரியாக 193.793 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர், 33.94 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக, கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அடுத்து நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சேலம் மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் வழங்கிட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோடைக் காலத்தில் சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிச் செய்யும் வகையில் அலுவலர்கள் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைக் காலத்தைக் கருத்திற்கொண்டு குடிநீரை தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. 

குறிப்பாக, கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் எவ்வித மின்தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்திட தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அசோக்குமார். பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் குருராஜன், உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) உமா நந்தினி உள்ளிட்ட தொடர்புடைய மாநகராட்சி, நகராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.