சின்ன சேலம்- பொற்படாக்குறிச்சி இடையே அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சின்ன சேலத்தில் இருந்து பொற்படாக்குறிச்சி வரை சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து, ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்றது. இதையொட்டி தென்னக ரயில்வே அதிகாரிகள், ரயில்வே கட்டுமான பிரிவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சின்ன சேலத்தில் இருந்து பொற்படாக்குறிச்சி வரை 10 டிராலிகளில் சென்று தண்டவாளத்தில் தரம், வலிமை, அதிர்வுகள், பாலங்களின் செயல்திறன் உள்ளிட்டவைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, சின்ன சேலத்தில் இருந்து பொற்படாக்குறிச்சிக்கு சிறப்பு ரயிலை சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி, தலைமை நிர்வாக அதிகாரி மவுரியா, தென்னக ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, துணை தலைமை பொறியாளர் திருமால் உள்ளிட்டோர் ரயிலில் சென்று ஆய்வு செய்தனர்.
பொற்படாக்குறிச்சி ரயில் நிலையத்தில் இருந்து சின்ன சேலத்திற்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது.


