ட்ரெண்டிங்

மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு! 

 

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இன்று (ஏப்ரல் 15) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்விற்குப் பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.72.43 கோடி மதிப்பீட்டிலான 2,742 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 2,363 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 379 பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில், இன்றையதினம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், காக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 16.88 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணியினையும், மேலும் பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 9.42 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் மற்றும் சமையல் அறைக்கூடம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கேட்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து. மகுடஞ்சாவடி ஊராட்சியில் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் நூலகம் கட்டும் பணியினையும், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 3.73 கோடி மதிப்பீட்டில் மகுடஞ்சாவடி வழியாக அத்தனூர் செல்லும் சாலையினை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மகுடஞ்சாவடி ஊராட்சியில் ரூபாய் 4.27 லட்சம் மதிப்பீட்டில் 10,000 நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அதேபோன்று, மகுடஞ்சாவடி கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டுவருவது குறித்தும், கிராமப்புற வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் நடுவனேரி ஊராட்சியில் தலா ரூபாய் 0.70 லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடுவனேரி ஊராட்சியில் ரூபாய் 13.56 லட்சம் மதிப்பீட்டில் உணவு தானியக் கிடங்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், தப்பக்குட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 9.90 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும், குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பணியாற்றிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.