ட்ரெண்டிங்

அதிகளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்! 

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களின் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான திறன் மேம்பாட்டு கருத்தரங்குக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (ஏப்ரல் 03) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப்பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து சுகாதாரமான சமூகத்தை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கிடும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2024-25-ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தில் நீர், நிலம், காற்று மற்றும் கடலில் நெகிழி மாசினைத் தடுக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் இணைந்து மாதத்திற்கு ஒருமுறை நெகிழிக்கழிவுகள் சேகரித்து அவற்றை அப்புறப்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களிடம் ஒப்படைத்திட அறிவுறுத்தியுள்ளார். 

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கங்கள் உருவாக்கப்பட்டு அதில் மாவட்ட ஆட்சியர் காலநிலை மாற்ற குழுவின் இயக்குநராகவும், மாவட்ட வன அலுவலர் காலநிலை மாற்ற அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களின் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான திறன் மேம்பாட்டு கருத்தரங்குக் கூட்டம் இன்றையதினம் நடத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் தனித்தனியே பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முக்கிய நீர்நிலைகளான ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் நெகிழிப்பைகளை அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இப்பணிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மொத்தம் 7,000- க்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் தலைமையில் இப்பணியை மேற்கொள்கின்றனர். இப்பணியானது ஒவ்வொரு மாதமும் நான்காம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நெகிழி கழிவுகளை சேகரிப்பது குறித்து ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உதவி பொறியாளர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்குத் தேவையான உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இன்றையதினம் நடைபெற்ற நெகிழிப் பொருட்களின் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பது குறித்த திறன் மேம்பாட்டு கருத்தரங்கில் இதுகுறித்து அதிகளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அலுவலர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இத்திறன் மேம்பாட்டு கருத்தரங்கில் காலநிலை மாற்ற சர்வதேச ஆராய்ச்சியாளர் டாக்டர்.இளங்கோவன் அவர்கள் நெகிழி பயன்பாடில்லா சேலம் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்யலஷ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.