சேலம் கோட்டை அழகிரிநாதர் பெருமாள் திருக்கோயிலில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் நுழைவுவாயில் கதவு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொருத்தப்பட்டது.
சேலம் கோட்டை அருள்மிகு அழகிரிநாதர் பெருமாள் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கடந்தாண்டு திருக்கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. கோயிலில் சுமார் 200 ஆண்டுகளான பழமையான நுழைவுவாயில் கதவு சிதிலமடைந்து காணப்பட்டது.
அதனை நீக்கிவிட்டு புதியதாக கதவு அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, திருப்பாவை நண்பர்கள் குழு சார்பில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் நுழைவுவாயில் கதவு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று நுழைவு வாயில் கதவு பொருத்தும் பணி நடைபெற்றது.
முன்னதாக கோயிலில் கலசபூஜைமற்றும் கதவின் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் பதிக்கப்பட்டு அர்ச்சனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கலச அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பின்னர் வேதங்கள் முழங்க நுழைவு வாயில் கதவு பொருத்தும் பணி நடைபெற்றது.
இது குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடேஸ்வரி சரவணன் கூறுகையில், கோட்டை பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஏப்ரல் 20- ஆம் தேதி நடக்கிறது. இதுவரை ரூபாய் 3 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கோயிலில் 90சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. கோயிலுக்கு சொந்தமாக 9,600 சதுர அடி நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கல்யாண மண்டபம் கட்ட, அறநிலையத்துறை அதிகாரியிடம் அனுமதி கேட்டுள்ளோம். மேலும் கோயிலை சுற்றியிலும் ஹாலோ பிரிக்ஸ் கல் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கல்யாண மண்டபம் அமைப்பதற்கு உபயதாரர்கள் முன்வரலாம் என்றார்.



-hcTFAGMRGb.jpg)