ட்ரெண்டிங்

வெள்ளி கொலுசு உற்பத்தி மையம், தொழிற்பேட்டை, அச்சு குழுமம் திறப்பு! 

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று (மார்ச் 25) காணொலிக் காட்சியின் வாயிலாக சேலம் மாவட்டம், அரியாக்கவுண்டம்பட்டியில் ரூபாய் 25.29 கோடி மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள வெள்ளி கொலுசு உற்பத்தி மையம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்,  உமையாள்புரத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டை மற்றும் சீலநாயக்கன்பட்டியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அச்சு குழுமத்தினையும் திறந்து வைத்தார். 

இதனைத்தொடர்ந்து, அரியாக்கவுண்டம்பட்டி வெள்ளி கொலுசு உற்பத்தி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி கலந்துகொண்டு வெள்ளி கொலுசு உற்பத்தி மையத்தினைப் பார்வையிட்டு தெரிவித்ததாவது, சேலம் மாவட்டம், தொழில் வளர்ச்சியில் முற்போக்கான மாவட்டங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இதனை மேலும் மேம்படுத்தும் விதமாக இன்றைய தினம் காணொளிக் காட்சியின் வாயிலாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் சேலம் அரியாக்கவுண்டம்பட்டியில் ரூபாய் 25.29 கோடி மதிப்பீட்டில் 1,209 ஏக்கர் பரப்பளவில் 102 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள வெள்ளி கொலுசு உற்பத்தி மையத்தினைத் திறந்து வைத்தார்.

அதேபோன்று, பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், உமையாள்புரத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டையினையும். சீலநாயக்கன்பட்டியில் ரூபாய் 13.46 கோடி மதிப்பீட்டில் 1.029 ஏக்கர் பரப்பளவில் 37 பொது சேவை மையங்களுடன் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அச்சு குழுமத்தினையும் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்ச்சியில், சேலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சிவகுமார், சிட்கோ கிளை மேலாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் பாஸ்கரன் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.