சேலம் மாவட்டத்திற்கு மெட்ரோ ரயில் சேவை வருமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மீண்டும் குழு அமைத்து ஆய்வுச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 5-வது பெரிய மாநகராட்சியாக சேலம் உள்ளது. 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள்தொகையினை கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால், அனைத்து மாநிலங்களை இணைக்கும் முக்கிய நகரமாக திகழ்கிறது. சேலம் ஒரு தொன்மை வாய்ந்த நகரமாகவும், கதர், பட்டு வளர்ச்சி, வெள்ளிக்கொலுசு மற்றும் சேலம் இரும்பு ஆலை போன்ற தொழில்துறைகளில் முன்னோடியாக விளங்குகிறது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக உள்ள சேலத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என சேலத்தில் ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம், திருச்சி, மதுரை, நெல்லை, சேலத்தில் கடந்த ஆண்டு தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சேலத்தில் 2 வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து தனியார் நிறுவனம் திட்ட அறிக்கையை தயாரித்தது.
இது தொடர்பாக, மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் அறிக்கையை தனியார் நிறுவனம் வழங்கியது. அதன்படி, மாநகர எல்லையான கருப்பூரில் தொடங்கி மாமாங்கம், ஜங்ஷன், சத்திரம், 4 ரோடு, கலெக்டர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம், தாதகாப்பட்டி, குகை, சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி வரையும் என மொத்தம் 18.03 கிலோ மீட்டர் தூரம் இயக்குவது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல் மற்றொரு வழித்தடமான உத்தமசோழபுரத்தில் தொடங்கி சந்தைப்பேட்டை, மணியனூர், சேலம் மார்க்கெட் ரயில் சந்திப்பு, கலெக்டர் அலுவலகம், சேலம் டவுன் ரயில் நிலையம், அக்ரஹாரம், அம்மாப்பேட்டை, உடையாப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் வரை 17.16 கிலோ மீட்டர் தூரம் இயக்குவது குறித்தும் கண்டறியப்பட்டது.
இதனிடையே மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் குழு, கோவை, திருச்சி, மதுரையில் மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக விரிவாக ஆலோசித்தது. இங்கு மெட்ரோ ரயில் பணிகள் இறுதிச் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சேலத்திற்கான மெட்ரோ ரயில் தொடர்பான அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் சேலம் மக்கள் ஏமாற்றமடைந்தனர். மீண்டும் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என அரசுக்கு மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.



