ட்ரெண்டிங்

தபால்சேவை மையம் மூலம் பாஸ்போர்ட் வழங்குவதில் சேலம் முதலிடம்! 

சேலத்தில் தபால்நிலைய சேவை மையம் மூலம் 8 ஆண்டுகளில் 1.47 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு மண்டல அளவில் முதலிடம் பெற்றுள்ளது என்று தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கோவை மேற்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் இயங்கும் சேலம் தலைமை தபால் நிலைய பாஸ்போர்ட் மையத்தில் தினமும் 100 முதல் 120 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கி வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் இச்சேவை மையத்தின் மூலம் இதுவரையில் சேலம் மாவட்டச் சேர்ந்த 1,47,771 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். 

ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவுடன் நேர்காணலுக்கான தேதி விண்ணப்பத்தாரருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. பின்னர், அந்த தேதியில் இருப்பிடத்திற்காக ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வயது தொடர்பான சான்றுக்காக பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்திட வேண்டும். 

இந்த நேர்காணல் முடிந்ததும், கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களின் முழு தகவல்களும் அனுப்பி வைக்கப்படுகிறது. அடுத்த 15 நாட்களுக்குள் காவல்துறை விசாரணையை முடித்து பாஸ்போர்ட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கின்றனர். 

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலத்தில் தான் அதிகப்படியானோருக்கு பாஸ்போர்ட் வழங்கியுள்ளோம்.மேற்கு மண்டல அளவில் முதலிடம் பிடித்து சாதனையும் படைத்துள்ளோம். 2022-23ம் ஆண்டில் 20,000 பேருக்கும், 2023-24ம் ஆண்டில் 22,000 பேருக்கும், 2024-25ம் ஆண்டில் 19,892 பேருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்படவுள்ளது. தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தினமும் 120 பேர் வரையில் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.